

திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் பணியை விட்டுவிட்டு காட்சிகளை வெட்டும் பணியில் ஈடுபட கூடாது என ‘உட்தா பஞ்சாப்’ திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரிய குழுவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகளை படக்குழு குறைத்து கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படம் வரும் 17-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பதை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், 89 காட்சிகள் ஆபாசமாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் இருப்பதாக கூறி, அதை நீக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். அத்துடன் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நகலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் ஷாலினி பன்சால்கர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் பணியை விட்டு விட்டு, காட்சிகளை வெட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. படைப்பாளிகளும், திரைப்படத் துறையும் வளர வேண்டும். பஞ்சாப் என்ற பெயரை படத்தில் இருந்து நீக்கிவிட்டால் திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதையும் கட்டமைப்பும் சீர்குலைந்துவிடும். ஆபாசமான காட்சிகளும், வார்த்தைகளும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என கூற முடியாது. ஏனெனில் தற்போதைய தலைமுறையினர் மிகுந்த முதிர்ச்சி அடைந்தவர்கள். நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடும் இத்தகைய திரைப்படங்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளன. அதற்கு காரணம் காட்சி திணப்புகள். எனவே மக்கள் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்க கூடாது என்பதை தணிக்கை வாரியம் தீர்மானிக்கக் கூடாது. அந்த முடிவை பொதுமக்களிடமே விட்டுவிடுங்கள்.
மேலும் தணிக்கை வாரியத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் பட நிறுவனத்தாருக்கு பணம் செலவழிக்காமல் விளம்பரம் கிடைத்து விடுகிறது. ஒரு திரைப்படத்தின் கதை மோசமாக இருந்தால், அது அனிச்சையாகவே தோல்வியை சந்திக்கும். போதைப் பொருள் பயன்பாடு மிகைப்படுத்தி காட்டுவதாக உணர்ந்தால் உட்தா பஞ்சாப் திரைப்படத்தை முழுமையாக தடை செய்யுங்கள். அதை விடுத்து காட்சிகளை வெட்டும் பணியில் ஈடுபடக் கூடாது. இதே போல் ஆபாசமான காட்சிகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்துவதை படக் குழுவினர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆபாசமான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் தயாராக இருப்பதாக அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி காதம் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.