பெங்களூரு மத்திய சிறையில் சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் சந்திப்பு: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

பெங்களூரு மத்திய சிறையில் சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் சந்திப்பு: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்
Updated on
2 min read

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலாவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்து தீவிர‌ ஆலோசனை நடத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சினை, தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது சசிகலாவைச் சிறையில் சந்தித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக அம்மா அணியின் மூத்த நிர்வாகியுமான‌ தம்பிதுரை, சசிகலாவைச் சந்திப்பதற்காக நேற்று பெங்களூரு சிறைக்கு வந்தார். சிறை அதிகாரிகளின் அனுமதிபெற்று, பிற்பகல் 1:45 மணிக்கு உள்ளே சென்ற தம்பிதுரை ச‌சிகலாவுடன் குடியரசுத் தலைவர் தேர்தல், பாஜகவின் வேட்பாளர், தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே அதிமுக (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜூன் மாதத்தில் 3-ம் முறையாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று வந்தார். பிற்பகல் 2.50 மணிக்கு டிடிவி தினகரன், அவரது மனைவி அனுராதா, உறவினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சிறைக்குள் சென்றனர். அங்கு பார்வையாளர் அறையில் இருந்த சசிகலாவையும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையையும் தினகரன் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? பாஜகவின் வேட்பாளரை ஆதரிப்பதா? கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, இரு அணிகளையும் எவ்வாறு ஒருங்கிணைப்பது? எம்எல்ஏக்களின் நிலைப்பாடு தொடர்பாக தம்பிதுரை, தினகரன், வெங்கடேஷ் ஆகியோருடன் சசிகலா ஆலோசித்ததாகத் தெரிகிறது.

‘கட்சி தொடர்பாக பேசினேன்’

இதன் பின்னர் மாலை 4 மணிக்கு தம்பிதுரை வெளியே வந்தார். அங்கு காத்திருந்த தமிழக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முருகன் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் அவர் ஆலோசித்தார்.

அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'சசிகலாவுடன் கட்சி தொடர்பாக ஆலோசித்தேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று கட்சித் தலைமை உரிய முடிவெடுக்கும். அந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். அதிமுகவில் பிரிந்திருக்கும் இரு அணிகளும் விரைவில் ஒன்று சேரும்' என்றார்.

‘அரசியல் பேசவில்லை’

தம்பிதுரை வெளியே வந்த பிறகு, டிடிவி தினகரன் 1 மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? இரு அணிகளையும் எப்போது இணைப்பது? என்னென்ன நிபந்தனைகளை ஏற்பது? மோதல் போக்கை கடைபிடிக்கும் அமைச்சர்கள் தொடர்பாக சசிகலாவுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாலை 5:15 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், 'இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. குடும்ப ரீதியான சந்திப்பு என்பதால் அரசியல் தொடர்பாக பேசவில்லை. சசிகலா எனது சித்தி என்பதால் அவரை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் இருக் கின்றனர். அதனால் யாருடனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. அரசியல் பழிவாங் கும் சதியின் காரணமாகவே என் மீது தேர்தல் ஆணைய வழக்கு போடப்பட்டிருக்கிறது' என்றார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே சமயத்தில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in