

சிறையில் கலகம் விளைவித்தாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி தன்னை சிறை அதிகாரிகள் அடித்து உதைத்ததாக சிபிஐ நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி மும்பை சிறையில் தள்ளப்பட்டார். இந்நிலையில் பெண் கைதி ஒருவர் இறந்ததையடுத்து சிறைக்கைதிகள் போராட்டம் செய்தனர். இந்தக் கலகத்தில் இந்திராணி முகர்ஜி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவரது வழக்கறிஞர் குஞ்சன் மங்களா சிறையில் இந்திராணியைச் சந்தித்ததாகவும் அப்போது இந்திராணி தான் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதை தெரிவித்தார் என்றும் கூறி சிபிஐ கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
“இந்திராணியின் தலை, கை, கால்களின் காயங்கள் இருந்ததைப் பார்த்தேன்” என்றார் வழக்கறிஞர். மேலும் சிறை அதிகாரிகள் இந்திராணியை கடும் சொற்களால் வசைபாடியதாகவும், சிறை மரணத்தை எதிர்த்ததற்காக பாலியல் ரீதியாக இந்திராணியை அச்சுறுத்தியதாகவும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.
பெண் கைதி மஞ்சு கோவிந்த் ஷெட்டி மரணமடைந்ததையடுத்து சிறையில் ஆர்பாட்டம் வெடித்தது, இந்நிலையில் இந்திராணி சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மீது புகார் அளிக்க கோர்ட்டுக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை வைத்துள்ளார் .
சிபிஐ நீதிபதி ஜே.சி.ஜக்தாலே, இந்திராணி வழக்கறிஞரிடம், “இது குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய விரும்புகிறாரா?” என்று கேட்ட போது ஆம் என்றார் வழக்கறிஞர்.
45 வயது கைதி மஞ்சு ஜூன் 23-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார், அவரை பெண் அதிகாரி ஒருவர் சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது.