

டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் நைஜீரிய இளைஞர் கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதற்கு நைஜீரிய மாணவர்களே காரணம் என்று வதந்திகள் பரவியது.
இதைத் தொடர்ந்து கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் 5 நைஜீரிய மாணவர்களை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் 5 பேரும் பலத்த காய மடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.