தாத்ரி சம்பவத்தில் இறுதி தடயவியல் அறிக்கை: உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தேகம்

தாத்ரி சம்பவத்தில் இறுதி தடயவியல் அறிக்கை: உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தேகம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் முகம்மது அக்லக் வீட்டில் இருந்தது பசுவின் இறைச்சியே என்று கூறும் தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக்களின் புனித விலங்கான பசுவை கொல்ல உ.பி.யில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத் தின் தாத்ரி மாவட்டம், பிசாரா என்ற கிராமத்தில் பசுவின் இறைச்சியை சமைத்து உண்டதாக முகம்மது அக்லக் (52) என்பவர் ஒரு கும்பலால் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் முகம்மது அக்லக் வீட்டில் கிடைத்த இறைச்சியின் மாதிரியை உ.பி. கால்நடைத்துறை ஆய்வு செய்து, அது ஆட்டின் இறைச்சியே என்று தனது முதல்கட்ட அறிக்கையில் கூறியது.

இந்த இறைச்சியின் மாதிரி, இறுதி ஆய்வுக்காக மதுராவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக “அக்லக் வீட்டில் இருந்தது பசுவின் இறைச்சிதான் என்று மதுரா ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என விசாரணை அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறினார். “ரசாயனப் பரிசோதனை அடிப்படையிலான இந்த அறிக்கை நொய்டா போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இது தொடர்பாக பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறும்போது, “இந்த அறிக்கை உ.பி. அரசையும், மத்தியில் உள்ள எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களில் ஒரு பிரிவினரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இந்துக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அக்லக் குடும்பத்தின் மீது பசுவதைக்கு எதிரான வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு அளித்த அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறவேண்டும்” என்றார்.

இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறும்போது, “இறைச்சியின் மாதிரி எங்கு அனுப்பி வைக்கப் பட்டது? அதை பெற்றுக்கொண்டது யார்? அக்லக் வீட்டில் ஆட் சேபனைக்குரிய பொருள் எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் இந்த வழக்கை கவனித்து வருகின்றனர். அக்லக் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்” என்றார்.

இதனிடையே மதுரா ஆய்வக அறிக்கையை அக்லக் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் அக்லக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விஷாலின் தந்தையான சஞ்சய் ரானா நேற்று கூறும்போது, “ஆளை கொல்வது எப்படி மிகப்பெரிய குற்றமோ அதுபோலவே பசுவை கொல்வதும் குற்றமாகும். எனவே அக்லக் குடும்பத்துக்கு எதிராக போலீஸில் புகார் செய்ய விருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in