

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க கர்நாடக அரசு அறிவித் திருந்த பாதுகாப்பு நடவடிக்கை களை செயல்படுத்தாத 180 தனியார் பள்ளிகள் மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் தனியார் பள்ளியில் படித்து வரும் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றங்களைக் கண்காணிக்க பெண் ஊழியர் களை நியமித்தல், பள்ளி பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது, ஒழுக்கமான பேருந்து ஓட்டுநர்களை நியமிப் பது, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் முழு விவரங்களையும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரி விப்பது உள்ளிட்ட பல்வேறு பாது காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த பாதுகாப்பு வழிமுறை களை செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண் டும் என பள்ளி நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் அக்டோபர் 31-ம் தேதிக்குள்ளும், அரசு பள்ளிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள்ளும் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டும் என கெடு விதித்தது.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம், “தனியார் பள்ளி களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து விட்டது. பள்ளிகளில் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படுகின்றனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங் குவது ஏன்?” என கடந்த வாரம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறை களை நிறைவேற்றாத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இதனிடையே பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவில் உள்ள 6000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் போலீஸாரும், கல்வி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 180-க்கும் அதிகமான பள்ளிகள் பாதுகாப்பு விதிமுறைகளை நிறை வேற்றாதது தெரியவந்துள்ளது. எனவே இந்த பள்ளிகள் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
நவம்பர் 30-க்கு பிறகு அரசு பள்ளிகளின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பிறகு அரசு பள்ளிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.