

கஜகஸ்தானின் அஸ்தானாவில் பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர் ஜின்பிங், அமீர்கானின் தங்கல் படம் தனக்குப் பிடித்திருந்ததாகத் தெரிவித்தார்.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தானின் அஸ்தனாவில் நடைபெற்ற போது இந்திய பிரதமர் மோடியை, சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்தித்தார். அப்போது அமிர் கான் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் தங்கல் படத்தைத் தான் பார்த்ததாகவும் படம் தனக்குப் பிடித்திருந்த்தாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கல் திரைப்படம் மே மாதம் 5-ம் தேதி சீனாவில் வெளியிடப்பட்டது. அங்கு இந்தப் படம் பல சாதனைகளை முறியடித்து ரூ.1,100 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது.
சீனாவில் ஒரு பில்லியன் யுவான் வசூல் சாதனை படைத்த 33-வது படம் தங்கல். இன்னமும் கூட சீனாவில் இந்தப் படம் 7,000 திரைகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியும் அதிபர் ஜின்பிங்கும் சந்தித்த போது, தங்கல் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தானே அந்தப் படத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்ததாக மத்திய அயலுறவு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.’
இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் முழு உறுப்பினர்களாக இணைந்துள்ளன.
வரும் யோகா தின கொண்டாட்டங்கள் பற்றியும் அதிபர் ஜின்பிங் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.