

அமெரிக்காவில், கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குவதாகவும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் இனவெறி காரணமாக இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது தாக்குதலைத் தடுக்க வந்த இயன் கிரில்லாட் காயமடைந்தார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இயன் கிரில்லாட்டுக்கு அனுப்பியுள்ள செய்தியில், ''இயன் கிரில்லாட்டின் வீரச்செயலுக்கு இந்தியா தலை வணங்குகிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இயன் கிரில்லாட் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பயணம் செய்யுமளவுக்கு அவர் குணமானதும், அவரும் அவரின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.