Last Updated : 31 Mar, 2017 04:09 PM

 

Published : 31 Mar 2017 04:09 PM
Last Updated : 31 Mar 2017 04:09 PM

தமிழக விவசாயிகள் மீது பாராமுகம் ஏன்?- பிரதமருக்கு ராகுல் கேள்வி

தமிழக விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

18-ம் நாளாக, தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தவகையில், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.00 மணிக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவளித்தார்.

ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டக்களத்திற்கு வந்த ராகுல், அங்கிருந்த தமிழக விவசாயிகள் அனைவரிடமும் கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தார்.

பின்னர், விவசாயிகளுடன் அமர்ந்தவர் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணுவிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அரை மணி நேரம் அவர்களுடன் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, அங்கு குவிந்திருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "கடந்த மூன்று ஆண்டுகளாக செல்வந்தர்களுக்கு மத்திய அரசு ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி நிவாரண உதவி அளித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. இந்த பாரபட்சம் ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. செல்வந்தர்களுக்கு உதவும் இந்த நாட்டின் பிரதமர் நமது நாட்டை கட்டிக் காக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுலின் வரவிற்கு முன்பாக ஜந்தர் மந்தரில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.செல்லகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் வந்திருந்தனர். இவர்களும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டு போராட்டக்களத்தில் அமர்ந்திருந்தனர்.

இது குறித்து 'தி இந்து'விடம் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு கூறுகையில், "தற்போது ஆளும் நம் மத்திய அரசிற்கு விவசாயிகள் தீண்டத்தகாதவர்களாகி விட்டனர். இதனால், அவர்கள் யாரும் எங்களிடம் வந்து பேசி தீர்வு காணத் தயாராக இல்லை. ஆனால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எங்களை மதித்து இன்று வந்திருந்தார். இவரால் விவசாயக் குடும்பங்கள் உற்சாகமடைந்துள்ளன" எனத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. இன்று ராகுல் வருகைக்கு முன்னதாக, மாநிலங்களவையில் திமுக அவைத்தலைவர் கனிமொழி வந்திருந்தார்.

விவசாயிகளை ஆதரித்து பேசிய கனிமொழி, தங்கள் கட்சி சார்பில் திருச்சி சிவா தமிழக விவசாயிகளை மத்திய நிதி அமைச்சரிடம் அழைத்து சென்றதை நினைவு கூர்ந்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான் பாண்டியனும் டெல்லி வந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x