Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

வேட்பாளர்கள் தேர்வில் ராகுலின் திட்டம்- மேலிட கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுமா?

தொண்டர்களே வேட்பாளர்களை தேர்வு செய்யும் ராகுல் காந்தியின் திட்டம், கட்சியின் மேலிட கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவதை நோக்கமாகக் கொண்டது என்று காங்கிரஸ் செய்திப் பிரிவு தலைவர் அஜய் மக்கான் கூறினார்.

டெல்லியில் கடந்த ஜனவரி 17ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “வரும் மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளின் வேட்பாளர்களை கட்சித் தொண்டர்களே தேர்வு செய்வார்கள். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், சட்டமன்ற தேர்தல்களுக்கு இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்” என்றார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30ம் தேதி, கட்சித் தொண்டர்களே வேட்பாளர்களை தேர்வு செய்யும் 16 மக்களவை தொகுதிகளின் பட்டியல் காங்கிரஸ் இணைய தளத்தில் வெளியானது.

அசாம் மாநிலத்தில் கவுகாத்தி, குஜராத்தில் பாவ் நகர், வடோதரா, கர்நாடகத்தில் பெங்களூர் வடக்கு, தக்ஷிண கன்னடா, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், மந்துசாவுர், மகாராஷ்டிரத்தில் அவுரங்காபாத், யவதமால்-வாஷிம், ராஜஸ்தானில் பிகானீர், ஜுன்ஜுனு, உத்தரப்பிரதேசத்தில் சந்த் கபீர் நகர், வாரணாசி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா வடக்கு, டெல்லியில் சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கும், எம்.பி பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அங்குள்ள கட்சிகளின் உறுப்பினர்களே தேர்வு செய்வது போன்ற இத்தகைய நடைமுறையை இந்தியாவில் காங்கிரஸ் கட்சிதான் முதலில் அமல்படுத்தப்போவதாக இணைய தளத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தகவல் வெளியான சில மணி நேரத்தில், டெல்லி சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி ஆகிய 2 தொகுதிகளும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.

இவ்விரு தொகுதிகளும் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், கிருஷ்ண தீரத் ஆகியோரின் தொகுதிகள். இவர்களின் எதிர்ப்பு காரணமாகவே இவ்விரு தொகுதிகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திப்பிரிவு தலைவர் அஜய் மக்கான், இத்தொகுதிகள் நீக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் எதிர்ப்பே காரணம் என்பதை மறுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தொடக்கத்தில் சில தடங்கல்கள் இருந்தாலும் இந்த நடைமுறை தொடரும். வேட்பாளர்களை கட்சி மேலிடம் தீர்மானிக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவதும், அடிமட்டத் தொண்டர்களை அதிகாரம் பெறச் செய்வதுமே இதன் நோக்கம்.

மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அந்த அமைப்புகளின் உறுப்பினர்களே தேர்வு செய்வதைத் தொடர்ந்து, இப்போது எம்.பி. தொகுதி வேட்பாளர்களையும் கட்சித் தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறார்.

இப்போது சிறிய அளவில் தொடங்கப்படும் இத்திட்டம். எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

தகவல் உரிமைச் சட்டம், லோக்பால் போன்ற சட்டங்கள் மூலம் அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் வேட்பாளர் தேர்வில் தொண்டர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் அரசியல் கட்சிகளின் நிர்வாகத் திலும் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர ராகுல் விரும்புகிறார் என அஜய் மக்கான் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x