Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

விலகியதாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பேரவைச் செயலரைச் சந்தித்தார் லாலு: கட்சியை உடைக்க முயல்வதாக நிதீஷ்குமார், பேரவைத் தலைவர் மீது குற்றச்சாட்டு

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகியதாகக் கூறப்பட்ட 9 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவை வளாகத்துக்கு நடந்து சென்ற லாலு பிரசாத் யாதவ், பேரவைச் செயலைச் சந்தித்தார்.

தன் கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் தனி இடம் ஒதுக்கக் கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ. சாம்ராட் சௌத்ரி தலைமையில் 13 எம்.எல்.ஏ.க்கள் விலகியதாக திங்கள் கிழமை தகவல் வெளியானது. விலகிய 13 பேரும் முதல்வர் நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவிப்ப தாகக் கூறினர். பேரவையில் தங்கள் 13 பேருக்கும் தனி இடம் ஒதுக்கக் கோரி பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்தனர்.

திடீர் திருப்பமாக அந்த 13 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் தாங்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகவில்லை என திங்கள்கிழமை மாலை மறுப்பு தெரிவித்தனர். இதனால் பிஹார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, விலகியதாகக் கூறப்படும் 13 எம்.எல்.ஏ.க்களில் 9 பேருடன் சட்டப்பேரவை வளாகத் துக்கு ஊர்வலமாக நடந்து சென்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பேரவைத் தலைவர் பூல் ஜாவைச் சந்தித்தார்.

அந்த 9 பேரின் விலகல் கடிதத் தைத் திரும்பப் பெறுவதற்கான கடிதத்தை லாலு பேரவைச் செயலரிடம் கொடுத்தார். மேலும், 13 எம்.எல்.ஏ.க்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் உடைந்த அணியாகச் செயல்படுவதை அங்கீகரிக்கும் பேரவை ஒப்புதலை பேரவைத் தலைவர் உதய் நாராயண் சௌத்ரி திரும்பப் பெற வேண்டும் எனவும் லாலு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ், தனது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் கூறியதாவது:

பாஜகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின் நிதீஷ்குமார் பித்துப் பிடித்ததுபோல் நடந்து கொள்கிறார். தன் சிறுபான்மை அரசைக் காப்பாற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் பதவி ஆசை காட்டி இழுத்து வருகிறார்.

பேரவைத் தலைவர் உதய் நாராயண் சௌத்ரி, 13 எம்.எல்.ஏ.க்களை தனி அணியாக அங்கீகரிப்பதில் அவசரகதியில் முடிவெடுத்துள்ளார் என்றார்.

பேரவை வளாகத்துக்கு லாலு சென்றபோது, அவருடன் சென்ற சில ஆதரவாளர்கள் பேரவைத் தலைவரின் வீட்டின்மேல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

முன்னதாக, விமான நிலை யத்தில் பேட்டியளித்த லாலு, “முதல்வர் நிதீஷ்குமாரும் பேர வைத் தலைவர் உதய் நாராயண் சௌத்ரியும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை உடைக்க சதிச்செயலில் ஈடுபடுவதாகக்” குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பேரவைத் தலைவர் உதய் நாராயண் சௌத்ரி, “தொலைக்காட்சிகளில் யார் என்ன சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சட்டப்பேரவைச் செயலகம் சரியான முடிவை எடுத்திருக்கிறது” என்றார்.

டெல்லியில் பாஜக-காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிதீஷ்குமார் கூறுகையில், “ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன. அக்கட்சி உடையும் தருவாயில் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x