

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை மகா தேரோட்டம் நடைபெற்றது.
இதில் உற்சவரான பத்மாவதி தாயார், வரலட்சுமி அவதாரத்தில், முத்து உடை அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோவிந்தா…கோவிந்தா’ எனும் கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள், தேரின் மீது மிளகு, உப்பு, சில்லறை நாணயங்களை வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். நான்கு மாட வீதிகளில் சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்றிரவு, குதிரை வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோயில் அருகே உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி குளக்கரை முழுவதும் மின் அலங்காரமும், மலர் அலங்காரமும் செய்யப் பட்டுள்ளது. பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மகா தேரோட்டம். தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்த தாயார்.