தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி

தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் தின தமிழர்- கன்னடர் ஒற்றுமை பேரணியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட‌ ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக கடந்த 1991-ம் ஆண்டு அல்சூர் ஏரி அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக 18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலை ‌ 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தமிழர்-கன்னடர் ஒற்றுமையை பேணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழாவின்போது திருவள்ளுவர் தின பேரணி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அல்சூர் ஏரிக்கரையில் நேற்று திருவள்ளுவர் தின தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை வகித்தார். பெங்களூரு மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநில‌த்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் சாதி சங்கங்களை சேர்ந்தவர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியரும் பேரணியில் பங்கேற்றனர். தமிழ், கன்னட கலை களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இறுதியில் மாநில அமைச்சர் ரோஷன்பெய்க், பெங்களூரு மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி, முன்னாள் எம்பி தருண் விஜய், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தின பேரணியில் சாதி சங்கங்களின் பேனர்களும் காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சியினரின் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in