

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை விமர்சித்து ப.சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது என்று தண்டனைக்குரிய குற்றம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட சில கருத்துகள் ஏற்புடையது அல்ல என்பதை ஒப்புக்கொள்வதாகவும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் கருத்துகளை வெளியிட வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி சதாசிவம் கூறினார்.
மிகவும் சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்தக் கருத்துகள் தேவையற்றது என்றும அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் ரசிக்கத்தக்கதாக இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்தப் பொது நல வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.