

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு, பாஜக ஆதரவு அமைப்புகள் மீது பிரஷாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவற்றின் ஆதரவு அமைப்புகளுக்கு ஆம் ஆத்மியின் அபரிவிதமான வளர்ச்சியினால் ஏற்பட்ட விரக்திதான் இந்த நிகழ்வுக்குக் காரணம்.
ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு, அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என்றார்.
அதேநேரத்தில், இந்தச் சம்பவத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் கவுசாம்பி பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தின் மீது இன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 50 முதல் 60 பேர் கொண்ட கும்பல் இன்று காலை திடீரென ஆம் ஆத்மி அலுவலகத்தின் முன் கூடி, சரமாரியாக தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பின் தேசியத் தலைவரை காஸியாபாத் போலீஸ் கைது செய்தது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பின் தேசியத் தலைவரை காஸியாபாத் போலீஸ் கைது செய்தது.