

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் (82), மத்தியில் காங் கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வீர்பத்ர சிங், அவரது மனைவி மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஏப்ரல் 13-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வீர்பத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக முடியாத காரணம் குறித்து அமலாக்கத் துறையினருக்கு தகவல் அனுப்பினாரா என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், ஏப்ரல் 20-ம் தேதி விசாரணை அதிகாரி முன்னிலையில் நேரில் ஆஜராகும்படி வீர்பத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா, மகன் விக்ரமாதித்யா ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் டெல்லியில் வீர்பத்ர சிங்குக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டையும் அமலாக்கத் துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.