Published : 09 Oct 2013 09:16 PM
Last Updated : 09 Oct 2013 09:16 PM

2014-ல் இளைஞர்களின் அரசே ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி

நாட்டில் ஏழைகளுக்காகவும் மாற்றத்துக்காகவும் 2014-ல் இளைஞர்களின் அரசே ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமை வகிப்பார் என்ற கணிப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் புதன்கிழமை நடந்தப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “இந்தியத் தேர்தலில் வெற்றிபெற்றால், ஏழைகளுக்கு உதவ வேண்டும். அவர்களுக்காக பணியாற்றும்போதுதான் வெற்றி கிடைக்கும். ஆனால், அவர்கள் (எதிர்கட்சியினர்) ஏழைகளைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்... ஏழைகளின் அரசு, சமானியர்களின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது. உங்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். 2014-ல் இளைஞர்களின் அரசு உருவாகப்போகிறது. அது, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். விளிம்பு நிலை மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் மாற்றத்தை அது கொண்டுவரும்” என்றார் ராகுல் காந்தி.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 43 வயதான ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று டெல்லி வட்டாரம் பேசிவருவது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்ட ராகுல் காந்தி, லட்சக்கணக்கான மக்கள் பசியுடன் தூங்கிய நிலை, உணவுப் பாதுகாப்பு மசோதாவால் மாறியிருப்பதாகக் கூறினார்.

வகுப்புக் கலவரம்... எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாடு

முன்னதாக, அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல், “அரசியல் ஆதாயங்களுக்காக மக்களிடையே மோதல் உருவாக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் பின்தங்கியிருப்பதற்கு, இங்கு மக்களிடையே பிரிவினை காணப்படுவதுதான் காரணமாகும். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் உருவாக்கப்படுகிறது. ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றோரினத்தவருடன் மோதவிடப்படுகின்றனர்.

சாமானிய மக்கள் சண்டையிட விரும்புவதில்லை. இதுபோன்ற வகுப்பு மோதல்கள் இல்லாவிட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என சில கட்சிகள் நினைக்கின்றன. ஆகவேதான் அவர்கள் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.

நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் உத்தரப் பிரதேசம் முன்னேறாது. உங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் உதவும்; உங்களின் உரிமைக்காகப் போராடும்” என்றார்.

முஸாபர் நகர் வன்முறைக்கு சமாஜ்வாடி மற்றும் பாஜக கட்சிகளே காரணம் என ராகுல் மறைமுகமாகக் குற்றம்சாட்டினார். அகிலேஷ் யாதவ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர், அனைத்து மத்தினர் மற்றும் சாதியினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி மாநிலத்தை வேகமாக வளர்ச்சியடையச் செய்ய காங்கிரஸால் மட்டுமே முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x