Published : 13 Nov 2013 07:58 AM
Last Updated : 13 Nov 2013 07:58 AM

வரம்பு மீற வேண்டாம்: சிபிஐ, சிஏஜி-க்கு சிதம்பரம் எச்சரிக்கை

சிபிஐ மற்றும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் (சிஏஜி) ஆகியவை தங்கள் எல்லை வரம்புகளை மீறக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.



சிபிஐ-யின் 50-வது ஆண்டு விழாவையொட்டி ஊழல் தடுப்பு குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ப. சிதம்பரம் பேசியது: கொள்கை வரையறை, கண்காணிப்பு ஆகியவற்றை பிரிக்கும் எல்லைக்கோட்டுக்கு சிபிஐ மதிப்பு அளிக்க வேண்டும். சில நேரங்களில் நேர்மையான கொள்கை முடிவுகளைக்கூட குற்ற நடவடிக்கையாக மாற்றும் முயற்சிகளில் சிபிஐயும் சிஏஜியும் ஈடுபடுகின்றன.

ஒவ்வொரு விதிக்கும் பின்னால் ஒரு கொள்கை இருக்கிறது. ஏன் இந்தக் கொள்கையை இப்படி வரையறுத்தீர்கள் என்று விசாரணை அமைப்புகள் கேள்வி எழுப்பக் கூடாது. அதேபோல் வேறு ஒரு மாற்றுக் கொள்கையைப் பரிந்துரைப்பதும் சிபிஐ-யின் பணி அல்ல.

வணிக, வர்த்தக ரீதியிலான கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்கும்போது புலனாய்வு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசு அலுவலர்களின் நிதி சார்ந்த விவகாரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்ளக் கூடாது. சட்ட விதிகள், நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து மட்டுமே புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும். சில நேரங்களில் சிபிஐயும் சிஏஜியும் தங்கள் வரம்பை மீறி தவறான முடிவுக்கு வருகின்றன. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

சிபிஐ கூண்டுக் கிளி அல்ல...

சிலர் ஜோடித்துக் கூறுவதுபோல் சிபிஐ அமைப்பு கூண்டுக் கிளி அல்ல. இதேபோல், அந்த அமைப்பை 'காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' என்று அழைப்பதும் விஷமத்தனமானது. சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. சிலரின் சுயலாபத்துக்காக இதுபோன்று பொய்களைப் புனைந்து பரப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள விசாரணை அமைப்புகளைவிட சிபிஐ மிகச் சிறந்த புலனாய்வு அமைப்பாகும். அதன் பல்வேறு சாதனைகளுக்காக நாம் மார்தட்டி பெருமை கொள்ளலாம். சிபிஐ ஒரு நம்பகமான அமைப்பும்கூட. பல்வேறு நேரங்களில் மாநில அரசுகள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோருவது அதன் நம்பகத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம். விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்...

சிபிஐ சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த அமைப்புக்கு தன்னாட்சி சுதந்திரம் அளிப்பதில் அரசால் என்ன செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செயல்படுத்தியுள்ளோம். எனினும் சிபிஐ-யும் அரசின் ஓர் அங்கம்தான். எனவே அரசின் அனைத்து துறைகளைப் போன்று சிபிஐ அமைப்பும் பொதுவான விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டும் என்றார்.

பிரதமரைத் தொடர்ந்து சிதம்பரமும்…

சிபிஐ கருத்தரங்கின் தொடக்க நாளில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசினார். அவர் பேசியபோது, அரசின் கொள்கை முடிவுகள், கிரிமினல் குற்றங்கள் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். முக்கிய கொள்கை முடிவுகளில் புலனாய்வு அமைப்புகள் தலையிடக் கூடாது என்று கூறினார். 2-வது நாள் கருத்தரங்கில் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி பேசிய ப.சிதம்பரம், சிபிஐ, சிஏஜி அமைப்புகள் வரம்பு மீறக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x