

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களின் மரண தண்டனையை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு மூவரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது.
மூவரும் 23 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதில் மூவரின் விடுதலை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய கடந்த 20-ம் தேதி இடைக்கால தடை விதித்தது.
புதிய மனு தாக்கல்
இந்நிலையில் 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா ஆஜரானார்.
மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ் வழக்கு ஆயுதச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவை தொடர்பானது. இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசுகள் குற்றவாளிகளை விடுதலை செய்தது கிடையாது.
நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குற்றவாளிகள் 7 பேரும் தங்கள் செயலுக்காக இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை ஆராயாமல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தமிழக அரசு கடந்த 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு வரும் 27-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.