

போதை மருந்து கடத்தல் வழக்கில் இந்தி நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரால் மாதம் மகா ராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலை மற்றும் தானே மற்றும் மும்பை பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட 20 டன் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தினர். சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த கடத்தலில் மம்தா குல்கர்னி, விக்கி கோஸ்வாமிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் தானே சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எச்.எம்.பட்வர்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஷிஷிர் ஹிரே கூறும் போது, “குல்கர்னி, கோஸ்வாமி மீதான புகாருக்கு போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாக (வெளி நாட்டில்) உள்ளனர். அவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி பட்வர்தன் இந்த இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தார்.
குல்கர்னி தம்பதி கென்யா தலைநகர் நைரோபியில் வசித்து வந்தனர். இந்நிலையில், அமெரிக் காவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் இருவர் மட்டுமல்லாது மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோஸ்வாமி மற்றும் சிலர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.