

டெல்லியின் 20-வது துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் (70) நேற்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய உள்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பதவிகளை ஏற்கெனவே வகித்துள்ள இவருக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹினி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமைச் செயலாளர் எம்எம் குட்டி, எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணைநிலை பதவியேற்றுக் கொண்ட பைஜாலிடம், முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜிப் ஜங்குக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவிய நிலையில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பைஜால் கூறும் போது, “அரசுடனான உறவு எப்படி மேம்படும் எனத் தெரியவில்லை. எனினும் நாங்கள் கூடி பேசிய பிறகு இதுபற்றி உங்களிடம் கூறுகிறேன்” என்றார்.