

சர்ச்சைக்குரிய பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமின் சகோதரர் வாக்குப்பதிவு மையத்துக்குள் துப்பாக்கி கொண்டு சென்றதாக நேற்று கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், சங்கீத் சோமின் சகோதரர் ககன் சோம், நேற்று காலை 9 மணிக்கு சர்தானா தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ககனிடம் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் காலத்தில் போலீஸாரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீத் சோம், சர்தானா தொகுதியின் இப்போதைய எம்எல்ஏ-வாக உள்ளார். கடந்த 2013-ல் முசாபர்நகர் பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் மூலம் இவரது பெயர் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.