கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

கர்நாடகத்தில் கட‌ந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டாததால், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி ஆகிய இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கடந்த சில மாதங்களாக‌ வறண்டு காணப்பட்ட காவிரியில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 72.12 அடியாக உயர்ந்தது. 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்கு 820 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் 2890 கன அடிநீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து முதல் முறையாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய் மூலம் காவிரியை அடைந்து பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக தமிழகத்தை வந்தடையும். கடும் வறட்சியால் வறண்டு காணப்படும் மேட்டூர் அணைக்கு அடுத்த‌ 48 மணி நேரத்துக்குள் இந்த நீர் வந்து சேரும். காவிரி ஆறு வறண்டு கிடப்பதால், கர்நாடகம் திறந்துவிட்டுள்ள பெரும்பாலான நீரை மணல் குடித்துவிடும். இருப்பினும் ஓரளவு நீராவது மேட்டூர் அணையை வந்தடையும் என காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in