

பிஹார் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீது தேச நிந்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “பாகிஸ்தானியர்களே. நாங்கள் காஷ்மீரை உங்களுக்குக் கொடுக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் பிஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு கூட்டுச் சலுகை. இரண்டையுமே சேர்த்துத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது” என கிண்டலடித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. எனினும், கட்ஜு தொடர்ந்து கிண்டலான கருத்துகளைப் பதிவு செய்தார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மேலவை உறுப்பினர் நீரஜ் குமார், சாஸ்திர நகர் காவல் நிலையத்தில் கட்ஜு மீது அரசியல் சாசன சட்டம் 124 –ஏ (தேச நிந்தனை) பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார்.
கட்ஜுவின் கருத்துக்கு, “கட்ஜு தன்னை பிஹாரின் ஆபத்பாந்தவனாக காட்டிக் கொள்கிறார்” என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பதிலடி கொடுத்திருந்தார்.
அதற்கு நிதிஷைக் கிண்டலடிக்கும் வகையில், “நான் பிஹாரிகளின் ஆபத்பாந்தவன் அல்ல. சகுனி மாமா” என கட்ஜு பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக பாட்னா தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அரவிந்த் குமார் என்ற வழக்கறிஞர் கட்ஜு மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தேச நிந்தனை (12-ஏ) உட்பட சட்டப்பிரிவுகள் 500, 501, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, கட்ஜு என் மீது ஐ.நா.வில் புகார் கொடுங்கள் என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.