ஒருங்கிணைந்த ஆந்திரம்: ஜெகனுக்கு ஒடிசா முதல்வர் ஆதரவு

ஒருங்கிணைந்த ஆந்திரம்: ஜெகனுக்கு ஒடிசா முதல்வர் ஆதரவு
Updated on
1 min read

ஆந்திரம் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாள் முதல் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஒருங்கிணைந்த ஆந்திரம் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொண்டார்.இந்நிலையில், நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இன்று, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சென்று சந்தித்து தனது கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக்: "மாநிலப் பிரிவினை என்பது பொது வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் குறுகிய ஆதாயங்களுக்காக நடைபெறக்கூடாது. மாநிலப் பிரிவினை மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. அதை நிறைவேற்றும் முன்னர் மக்கள் கருத்தை அறிவது அவசியம்", என்றார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரிலேயே தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திரம் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in