

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை சுமார் 1 மணி நேரம் ஒத்திவைக்க நேரிட்டது.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் கூறியபடி, மேற்குத்தொடர்ச்சி மலையில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களில் தொழிற்சாலை மற்றும் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக, மத்திய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் மத்திய அரசு கருத்து கூறியிருந்தது.
கேரளத்தின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்ற தனது வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டது என எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இடுக்கி பெண் எம்எல்ஏ பிஜுமோள் உள்பட மலைப் பிராந்திய எம்எல்ஏக்கள் 5 பேர் அவையின் மையப்பகுதியில் கூடி, இதுகுறித்து உடனே விவாதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட தால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதையடுத்து அவை 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோருடன் பேரவைத் தலைவர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். இதில் இந்த விவகாரத்தை அவையில் வியாழக்கிழமை விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவை மீண்டும் கூடியதும் அமைதி திரும்பியது.
முன்னதாக இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன், “123 கிராமங்களின் மக்கள் தாங்கள் எந்நேரமும் வெளி யேற்றப்படலாம் என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்” என்றார்.
இதற்கு முதல்வர் உம்மன் சாண்டி பதில் அளிக்கையில், “மலைப்பிராந்திய மக்கள் அச்சப்பட வேண்டாம். தற் போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது.
கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையில் தேவையான மாற்றங்களை செய்யும் நடவடிக்கையில் மாநில அரசு வெற்றி பெறும். இப்பகுதி விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.