இந்தோனேசியாவில் கடைசி நேரத்தில் இந்தியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு

இந்தோனேசியாவில் கடைசி நேரத்தில் இந்தியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு
Updated on
1 min read

இந்தோனேசியாவில் இந்தியரின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம், மெஹத்பூர் நகரைச் சேர்ந்தவர் குர்திப் சிங் (48). அவர் கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியா வின் பாண்டன் பகுதியில் 300 கிராம் போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட் டார். அவருக்கு 2005-ம் ஆண்டில் உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதி மன்றத்திலும் அவரது மேல்முறை யீடு நிராகரிக்கப்பட்டது.

இதேபோல இந்தோனேசி யாவை சேர்ந்த 4 பேர், நைஜீரி யாவை சேர்ந்த 6 பேர், ஜிம்பாப்வேவை சேர்ந்த 2 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வருக்கும் போதை கடத்தல் வழக்குகளில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்தியர் குர்திப் சிங் உட்பட 14 பேருக்கும் மத்திய ஜாவா, சிலாகேப் தீவு, நுசாகம்பங்கன் சிறையில் நேற்று முன்தினம் இரவு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டதாக நள்ளிரவில் தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் இந்தியர் உட்பட 10 பேரின் மரண தண்டனையை இந்தோனேசிய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய அரசு நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர், நைஜீரியாவை சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தியர் குர்திப் சிங் உட்பட 10 பேர் விவகாரத்தில் மேலும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், குர்திப் சிங்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, 10 பேரின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட தாக தெரிகிறது.

மனைவி வேண்டுகோள்

குர்திப் சிங்கின் மரண தண்டனை நிறுத்தப்பட்டதால் பஞ்சாபில் வசிக்கும் அவரது மனைவி குல்விந்தர் கவுர், மகள் மன்ஜித் கவுர், மகன் சுக்பிர் சிங் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

குல்விந்தர் கவுர் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது: கடைசி நேரத்தில் எனது கணவர் உயிர் தப்பியதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

முகவரின் ஏமாற்று வேலையால் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுப வித்துள்ளார். அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in