Last Updated : 20 Jan, 2017 09:21 PM

 

Published : 20 Jan 2017 09:21 PM
Last Updated : 20 Jan 2017 09:21 PM

ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற்ற வாய்ப்பு: 4 அமைச்சகங்கள் கருத்துகளுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு சென்றது

ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற்றும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதன் முன்வடிவு 4 அமைச்சகங்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் கருத்துகளுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீதான சட்ட முன்வடிவு வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மதியம் இறுதி வடிவம் அளித்தது.

பிறகு சம்பந்தப்பட்ட மற்ற 3 அமைச்சகங்களுக்கு கருத்து கேட்டு உடனடியாக அனுப்பப்பட்டது. சட்டமுன்வடிவின் மீது சட்டம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று மத்திய அமைச்சகங்களும் தங்கள் கருத்துகளை சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாலை அனுப்பி விட்டன.

இதில் சட்ட அமைச்சகம் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோஹத்கியிடம் அனுப்பி கருத்து பெற்று அனுப்பியது. இதை பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு கிடைத்த கருத்துகளுக்கு ஏற்ற வகையில் சிறிய திருத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த அவசரச் சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இதை குடியரசுத் தலைவர் படித்து நாளை அனுப்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். பிறகு இது தமிழக அரசால் அதன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இறுதி ஒப்புதல் பெறப்படும். எனவே, ஜல்லிக்கட்டு மீதான இந்த அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 'சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் அனில் மாதவ் தாவே ஆகிய இருவரும் தம் வெளியூர் பயணங்களை ரத்து செய்து காத்திருந்தனர்.

மாநில அரசுகளுக்கான அவசரச் சட்டங்களை அதன் ஆளுநரே பிறப்பிக்கலாம். ஆனால், அவை பொதுப்பட்டியலில் இடம் பெறாதவையாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பொதுப்பட்டியலில்( concurrent list) இடம் பெற்றுள்ளதால் அதை மாநில அரசு திருத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சட்டங்களை மத்திய அல்லது மாநிலம் என இருஅரசுகளாலும் திருத்தம் செய்யலாம். இதன்படியே இன்று திருத்தம் செய்து அவசரச் சட்டம் இயற்றப்பட உள்ளது' எனத் தெரிவித்தனர்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, பொதுப்பட்டியல் எண் 3-ல் 17 ஆவது இடத்தில் (மிருகவதை தடுப்புச் சட்டம் 1960) இடம் பெற்றுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் வராது என்று தமிழக அரசால் செய்யப்பட்ட திருத்தம் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இது இயற்றப்பட்ட ஆறு மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டு இந்த அவசரச் சட்டத்திற்கான வரைவு மசோதா முறையாக அமலாக்கப்படுவதும் அவசியம் ஆகும். இல்லையெனில், ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் காலாவாதியாக வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x