

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று இரு மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். எனினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் குழு விவசாயிகளை சந்தித்தது. இதில், போராட்டத்தை கைவிடும்படியும், தாம் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.
இதே உறுதியை அன்று மாலை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறையில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் விவசாயிகளை நேரில் சந்தித்து தெரிவித்திருந்தார். ஆனால், இந்த இருதரப்பினருக்கும் மறுப்பு தெரிவித்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இதை அடுத்து இன்று தம்பிதுரை தலைமையிலான 15 பேர் கொண்ட அதிமுக எம்பிக்கள் குழு, தாம் வாக்களித்தபடி மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோருடன் விவசாயிகளின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இது குறித்து 'தி இந்து'விடம் தமிழக தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ''நிதி அமைச்சர் அருண்ஜேட்லியிடம் தமிழகத்தின் வறட்சிக்கு உடனடி நிவாரணம் மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சினையை வலியுறுத்தினோம். இதே கோரிக்கையை கடந்த வருடம் அவரை சந்தித்த போது எடுத்துரைத்ததையும் நினைவுகூர்ந்தோம். எங்களுக்கு ஆதரவாக துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஆதரித்து அமைச்சரிடம் பேசினார்.
எங்களுடன் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் அதை அமைச்சரிடம் வலியுறுத்தினார். உமாபாரதியிடம் கர்நாடகா கட்டும் மேகதாது அணைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தினோம். காவிரி மேலாண்மை குழு அமைக்கக் கோரிய போது அது, உச்ச நீதிமன்ற நிலுவையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்புகளுக்கு பின்பும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும்'' எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது திமுகவின் மாநிலங்களவை மூத்த உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனும் கலந்து கொண்டார். இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களில் இல்லாத வகையில் இந்தமுறை தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலை தெரிகிறது
டெல்லியில் கடந்த 14 ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் உட்படப் பல்வேறு வகை போராட்டம் நாடு முழுவதிலும் பெரும் கவனத்தை கவர்ந்துள்ளது. இங்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் ஒருவார காலமாக அவர்களை எந்த மத்திய அமைச்சர்களும் சந்திக்க முன்வரவில்லை.
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத்தினர் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அதன் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை ஏற்றுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகள் உட்பட சுமார் 100 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.