Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

காங்கிரஸ் தலைமைக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

ஆந்திர சட்டமன்றத்தில் தெலங்கானா வரைவு மசோதாவை தோற்கடிப்போம் என்று அந்த மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைமைக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரத்தைப் பிரித்து 10 மாவட்டங்கள் அடங்கிய தெலங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது பரிந்துரையின்பேரில் ஆந்திர சட்டமன்றத்துக்கு மசோதா அனுப்பப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், விஜயவாடாவில் கிருஷ்ணா நதிநீர் பாசனத் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:

ஆந்திர சட்டமன்றத்தில் தெலங்கானா வரைவு மசோதா தோற்கடிக்கப்படுவது உறுதி. அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகர ராவின் விருப்பத்துக்காக ஆந்திரத்தைப் பிரிக்க நீங்கள் (காங்கிரஸ்) முடிவு செய்திருக்கலாம். அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனின் ஆதரவுக்காக முயற்சி மேற்கொள்ளலாம். அப்படியென்றால் அவர்களைக் கட்சியில் சேருங்கள். அவர்களையே முதல்வர் ஆக்குங்கள்.

அரசியல் ஆதாயத்துக்காகவே ஆந்திரத்தைப் பிரிக்க காங்கிரஸ் தலைமை துடிக்கிறது. சந்திர சேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் தலைமை, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது ஏன்?

டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் கண்கள், காதுகள், வாயை இறுக்கமாகக் மூடிக் கொண்டுள்ளனர். தாங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே காங்கிரஸ் தலைமை வெட்டிக் கொண்டிருக்கிறது.

ஆந்திர மக்கள் என்ன தவறு செய்தார்கள். காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது தவறா? மத்திய அரியணையில் காங்கிரஸை அமர்த்தி அழகுப் பார்த்தது தவறா?

1972-ம் ஆண்டில் இதே பிரிவினை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ஆந்திரத்தைப் பிரிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் உரக்கக் கூறினார். ஆனால், இன்றைய காங்கிரஸ் தலைமை இந்திரா காந்தியின் கொள்கைகளில் இருந்து பின்வாங்கிவிட்டது என்றார் கிரண்குமார் ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x