

புதுச்சேரி அரசுக் கொறடா உள்பட 6 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சனிக்கிழமை ரகசியக் கூட்டத்தை திடீரென்று கூட்டினர். பின்னர் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்தனர். இதனால் புதுச்சேரி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் அரசு கடந்த 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், எதிர்க்கட்சிகள் உள்பட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலரும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், அரசுக் கொறடா நேரு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், கார்த்திகேயன், அசோக் ஆனந்த், அங்காளன் ஆகியோர் லாஸ்பேட்டையிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ரகசியமாகக் கூடினர். இரண்டு மணி நேரம் நடந்த இக்கூட்டத்துக்கு பின்னர், கொறடா அறையில் வைத்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதுபற்றி தகவலறிந்த சட்டப் பேரவைத் தலைவர் சபாபதி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் சட்டப் பேரவையிலுள்ள தனது அறைக்கு அழைத்துப் பேசினார்.
இதுதொடர்பாக அரசுக் கொறடா நேருவிடம் கேட்டதற்கு, “கமிட்டிகளை கூட்டி விவாதம் செய்து வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசினோம். சட்டப்பேரவைத் தலைவரிடம் கமிட்டிகளைக் கூட்டக் கூறினோம். வளர்ச்சிப் பணிகளைத் தவிர வேறு ஏதும் பேசிவில்லை” என்றார். அவர் பேசுவதை அங்கிருந்த எம்.எல்.ஏ.க்கள் தடுத்து, முதல்வரைச் சந்தித்த பின் நிருபர்களிடம் கூறலாம் என அழைத்துச் சென்றனர். புதுச்சேரியில் மொத்தம் 30 எம்எல்ஏக்களில் 15 பேர் என்ஆர் காங்கிரஸும், 1 ஆதரவு சுயேச்சை, 7 பேர் காங்கிரஸ், 5 பேர் அதிமுக, 2 பேர் திமுக என உள்ளனர்.
இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமி நிருபர்களைச் சந்தித்தார். பல அறிவிப்புகள் செயல்படுத்தும் தேதியை அப்போது அவர் அறிவித்தார். ஆளுநர்-முதல்வர் இடையிலான மோதல் குறித்து கேட்டதற்கு, “புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது. ஆளுநருடன் சண்டைபோட்டால்தானே சமாதானம் ஆவதற்கு” என்றார். ஆறு எம்எல்ஏக்கள் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “ஒற்றுமை யாகதான் இருக்கிறோம்” என்று கூறி புறப்பட்டார்.
சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். தனது வீட்டருகே உள்ள கோயிலில் அன்னதானம் முடித்துவிட்டு வீடு திரும்பிய முதல்வர், அங்கு காத்திருந்த எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுக் கொறடா நேரு கூறுகையில், “முதல்வரிடம் தொகுதி வளர்ச்சி குறித்து பேசினோம். ஆட்சிக்கு ஆபத்து இல்லை. நாங்கள் ரகசியக் கூட்டம் நடத்தவில்லை. அதிகாரிகள் செயல்பாடு மற்றும் மாநில வளர்ச்சி குறித்துதான் பேசினோம்” என்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அன்பழகன் கூறுகையில், “புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிடவேண்டும்” எனக்கோரி மனு அளித்தோம் என்றார்.