

ஆதாயம் இரட்டைப் பதவி தொடர் பான சர்ச்சை குறித்து 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடம் தேர்தல் ஆணையம் வரும் ஜூலை 14-ம் தேதி தனித்தனியாக விசாரணை நடத்தவுள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் 21 பேரை சட்டப்பேரவைச் செயலாளர் களாக டெல்லி அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து, இரட்டை ஆதாயப் பதவி வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படும் அபாயம் எழுந்தது.
வழக்கறிஞர் பிரசாந்த் படேலின் புகாரைத் தொடர்ந்து, 21 எம்எல்ஏக் களிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.இந்தப் பதவியால் எவ்வித நிதிச்சலுகைகளும் கிடை யாது என எம்எல்ஏக்கள் கூறினர். இதுதொடர்பாக வரும் ஜூலை 14-ம் தேதி தேர்தல் ஆணையம் 21 எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தவுள்ளது.
முன்னதாக, பேரவை செயலாளர் களாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக் கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க, டெல்லி எம்எல்ஏக்கள் (தகுதி நீக்கம்) சட்டம் 1997-ல் திருத்தம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இதன்படி, ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிக்க தடை செய்யும் சட்டத்திலிருந்து 21 எம்எல்ஏக்களுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவை இயற்றி அதை முன்தேதியிட்டு நடை முறைப்படுத்தவும் திட்டமிட்டது.
இந்த மசோதா ஆளுநர் நஜிப் ஜங் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது பரிந்துரையுடன் மத்திய அரசு இந்த மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் பிரணாப்புக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
ஜாமீன் மனு நிராகரிப்பு
பெண்களை இழிவுபடுத்தியதாக கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மோஹனியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.