

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த 26-ம் தேதி அமலுக்கு வந்தது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் நபம் துகியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர்.
பின்னர் அவர்கள் பாஜக மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்கள் உதவியுடன் நபம் துகியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர். இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்தும் அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் உறுதியின்மை ஏற்பட்டிருப்பதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் கிழமை பரிந்துரை செய்தது.
இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சீன எல்லையுடனான ஒரு மாநிலத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் இத்தகைய முடிவு ஏற்கத்தக்கதல்ல என அம்மாநில முதல்வர் நபம் துகி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக ரகசியம் காக்க விரும்புவதாக அருணாச்சலப் பிரதேச ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.