தேசிய நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இன்னும் பல மாநிலங்கள் நிறைவேற்றாமல் இருப்பதன் காரணமாக, மத்திய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக சுமார் ஐந்து லட்சம் விபத்துக்கள் நேர்வதுடன் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்கள் பலியாகி விடுகின்றன. இந்த எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவில் அதிகம் எனக் கருதப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைந்துள்ள மதுக்கடைகளும் ஒரு முக்கியக் காரணம். இதில் மது அருந்தும் பழக்கம் கொண்ட பல ஓட்டுநர்கள் அதை அருந்தியபடி வாகனங்களை செலுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

இதை தடுக்க மத்திய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படியும், புதிதாக உரிமம் தர வேண்டாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது. இதை அறிவுறுத்தி மத்திய அரசு இதுவரை, மூன்று கடிதங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியிருந்தது.

இது மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்திற்கு பொருந்தாத நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் துவக்கத்தில் பின்பற்றின. எனினும், பிறகு நீதிமன்றம் மூலமாக நெடுஞ்சாலைத்துறையின் உத்தரவிற்கு இரு மாநிலங்களும் தடை பெற்று விட்டன. இதற்குமதுக்கடைகள் மூடலால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் காரணம் கூறி இருந்தன.

இது குறித்த ஒரு வழக்கில் கடந்த வருடம் உச்ச நீதிமன்றம், மதுக்கடைகள் சம்மந்தந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளின் துறைகள் மற்றும் உரிமையாளர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசித்த பின் தான் இதன் மீது முடிவு எடுக்க முடியும் எனக் கருத்து கூறி இருந்தது.

இந்த நிலையில், மதுக்கடைகளால் ஏற்படும் விபத்துக்களை மீண்டும் வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in