

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் சட்டம் பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கிய பேராசிரியர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம், கடந்த திங்கள்கிழமை பல்கலைகழகத்தின் சட்டத்துறை தலைவரது அறையில் நடந்துள்ளது. அந்த பதவியில் இருக்கும் பேராசிரியர் அகமது ஷப்பீர் இதைச் செய்ததாக அவர் மீது, பாதிக்கப்பட்ட மாணவி கடந்த புதன்கிழமை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, அன்று இரவு ஒன்பது மணிக்கு அவசரமாகக் கூடிய மகளிர் மீதான புகார் நடவடிக்கை குழு, நள்ளிரவு 12.00 மணி வரை ஆலோசனை நடத்தியது. பின்னர் அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் ஷப்பீர் அகமது உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதேநாளில் அப்பகுதி சிவில் லைன் காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்ட புகாரின் பேரில், அகமது ஷப்பீர் மீது ஐபிசி 354, 354 ஏ மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஷப்பீரை அலிகர் போலீஸ் தேடி வருகிறது.
இதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆய்வுக்காக வந்த மாணவியை அலிகரின் ஒரு ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஷப்பீர் 2005-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, ஷப்பீர் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக் கூறியதால், ஏழு மாதங்களுக்கு பின் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இதுபற்றி, ஷப்பீரின் மனைவி டாக்டர் நூர் அப்ரோஸ் கூறுகையில், ‘இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார்.