Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

சென்னையில் ஒரே நாளில் 23 கிலோ தங்கம் பறிமுதல்: வாகனச் சோதனையில் ரூ.78 லட்சமும் சிக்கியது

சென்னையில் புதன்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 23 கிலோ தங்கம், ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும் போலீஸாரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் புதன்கிழமை காலை தேர்தல் அதிகாரி தாசில்தார் சுப்பிரமணியன் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது ஹர்வீந்தர் என்பவர் வந்த காரில் 5 பேக்குகளில் 22 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, ‘‘இந்த நகைகள் அனைத்தும் பாரிமுனையில் உள்ள ஹஸ்மித் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமானது. அவரது கடையில் வேலை பார்க்கிறேன்’’ என்றார்.

நகைகளுக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. அதனால், நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களைக் காட்டினால் நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தேர்தல் அதிகாரி முனியசேகர் தலைமையில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ. 60 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் இருந்தவர்கள், ‘‘நாங்கள் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள். ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக பணத்தை கொண்டு செல்கிறோம்’’ என்றனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஆவடி கருவூலத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளனர். ஆவணங்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவடி பகுதி தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் சிக்னல் அருகே புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தேர்தல் அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் சிக்கியது.

காரில் இருந்தவர், மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரி ஊழியர் பிரபாகரன் என்று தெரிந்தது. கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். அவரிடம் ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல மூலக்கடை சிக்னல் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், காரில் இருந்த ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரைப் பார்த்ததும் காரை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பிவிட்டார். பதிவு எண்ணை வைத்து காரின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கவேல் என்பவர் வந்த காரில் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டேரியைச் சேர்ந்த நகை வியாபாரி மதன்லால், செங்குன்றம் சாலையில் காரில் சென்றபோது, தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார். காரில் 500 கிராம் தங்க நகைகள், 500 கிராம் தங்கக் கட்டிகள், ரூ.4.5 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் நகைகளும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 23 கிலோ தங்கம் மற்றும் ரூ.78 லட்சம் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x