

டெல்லி அருகே நிதாரி படுகொலை வழக்கில் சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை நவம்பர் 25-ம் தேதி வரை நிறுத்தி வைக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது கருணை மனுவை பரிசீலிப்பதில் காலதாமதம் செய்தது ஏன் என்று கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மனுவை ஏற்று இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க நீண்ட தாமதம் ஆகும்பட்சத்தில் அதை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி கோலி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்தது குறிப்பிடத் தக்கது.