Published : 28 Jan 2016 03:47 PM
Last Updated : 28 Jan 2016 03:47 PM

மத்திய அரசு வெளியிட்ட முதல் 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சென்னை, கோவை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெறும் முதல் 20 நகரங்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியானது. இதில், தமிழகத்தின் கோவை, சென்னை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இப்பட்டியலை வெளியிட்டார். மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் ஆலோசனையுடன் இப்பட்டியல் இறுதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 98 நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியல் இன்று வெளியானது.

இந்த 98 நகரங்களும், 5 ஆண்டு காலத்தில் திறன்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கப்படும். இவற்றில், 24 நகரங்கள் மாநில தலைநகர்கள், 24 தொழில், வர்த்தக நகரங்கள், 18 கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த நகரங்கள், 5 துறைமுக நகரங்கள், 3 கல்வி மற்றும் மருத்துவம் சார் நகரங்கள் அடங்கும்.

முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 ஸ்மார்ட் நகரங்கள்: புவனேசுவரம் (ஒடிஷா), புணே (மகாராஷ்டிரா), ஜெய்பூர் (ராஜஸ்தான்), சூரத் (குஜராத்), கொச்சி (கேரளா), ஆமதாபாத் (குஜராத்), ஜபல்பூர் (மத்தியப்பிரதேசம்), விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்), சோலாபூர் (மகாராஷ்டிரா), தேவாங்கிரி (கர்நாடகா), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), புது டெல்லி மாநகராட்சி, கோயம்புத்தூர் (தமிழ்நாடு), காக்கிநாடா( ஆந்திரப்பிரதேசம்), பெலகாவி (கர்நாடகா), உதய்பூர் (ராஜஸ்தான்), குவாஹாட்டி (அசாம்), சென்னை (தமிழ்நாடு), லூதியானா (பஞ்சாப்), போபால் (மத்தியப் பிரதேசம்).

செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியாதவது:

இந்த நகரங்களுக்கு முதல்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு, ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்படும். அடுத்த ஆண்டு 40 நகரங்களும், அதற்கடுத்த ஆண்டு 38 நகரங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த 20 நகரங்களில் 3.54 கோடி மக்கள் வசிக்கின்றனர். 5 ஆண்டு காலத்தில் ரூ.50 ஆயிரத்து 802 கோடி இந்த நகரங்களுக்கு வழங்கப்படும். இளம் இந்தியாவின் பேராவலைப் பூர்த்தி செய்யும் விதத்தில், ஒருங்கிணைந்த, நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் பாங்கான வாழ்க்கைச் சூழலை இந்த நகரங்கள் அளிக்கும். வளர்ச்சியடைந்த எந்தவொரு ஐரோப்பிய நகரத்துக்கும் இணையானதாக இந்த நகரங்கள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வைஃபை உட்பட தரமான தொலைத்தொடர்பு, குழாய் மூலம் குடிநீர் விநியோகம், தானியங்கி கழிவு சேகரிப்பு, தடையில்லா மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின் ஆளுமை, பொதுமக்கள் பங்களிப்பு என அனைத்துவித கட்டமைப்புகள் உடையதாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.

நகர்ப்புற மக்கள் தொகை 40 கோடியிலிருந்து வரும் 2050-ல் 81.4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவிர நகர்மயமாதலை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எதிர்நோக்கியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.6,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

அடிப்படை விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என நகர திட்டமிடல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த திட்டமிடல் துறை பேராசிரியர் ருதுல் ஜோஷி கூறும்போது, “நகரிலுள்ள ஒவ்வொருவருக்கும் போதுமான வாழிடம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, அனைத்து தெருக்களிலும் நடைபாதை, பெரிய பாதைகளில் பேருந்துகளுக்கான பாதை இருந்தால்தான் அது ஸ்மார்ட் சிட்டி” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த நகர்ப்புற மேம்பாட்டு நிபுணர் ஜோசென் மிஸ்டெல்பாசர் கூறும்போது, “இந்தியாவின் மிக வேகமான நகர்மயமாதலின் பிரச்சினைகளான இழிநிலையிலான உள்கட்டமைப்புக, சேவை பற்றாக்குறை, வீடுகளுக்கு நிலம் போதாமை போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சரி, ஏற்கனெவே ஸ்மார்ட் சிட்டியாக உள்ள நகரங்களில் என்னென்ன உள்கட்டமைப்புகளும், வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? - ஒரு விரிவான பார்வைக்கு ->எப்படி இருக்கும் / இருக்க வேண்டும் 'ஸ்மார்ட் சிட்டி'?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x