Published : 08 Nov 2014 11:52 AM
Last Updated : 08 Nov 2014 11:52 AM

சூரத்தில் விமானம் மோதியதில் எருமை மாடு பலி: 140 பயணிகள் உயிர் தப்பினர்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் சுற்றித் திரிந்த எருமை மாடு மீது மோதியது. எனினும் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், 140 பயணிகளுடன் சூரத் விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. சில மீட்டர் தூரம் சென்றதும் அவ்வழியாக குறுக்கே எருமை மாடு வந்ததை பைலட் பார்த்துள்ளார்.

ஆனாலும் உடனடியாக நிறுத்த முடியாததால் அதன் மீது விமானம் மோதியது. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் எருமை பலியானது. ஆனால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் கடுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையரகம் ஆகிவற்றுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சூரத் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் கால்நடைகள் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. இதனால் விமான நிலைய சுற்றுச் சுவரில் உள்ள ஒரு இடைவெளி வழியாக உள்ளே நுழைந்த அந்த எருமை மாடு விபத்தில் சிக்கி உள்ளது.

இதுகுறித்து விமானப் பயணி பிரபாகர் ஜோஷி கூறும்போது, “எருமை மீது மோதிய பிறகு நல்ல வேளையாக விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பயணம் செய்திருந்தால் விமானம் வெடித்துச் சிதறி இருக்கும். எங்களைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி” என்றார். இந்த சம்பவத்தையடுத்து அனைத்து விமான சேவை களையும் ஸ்பைஸ் ஜெட் காலவரையின்றி ரத்து செய்தது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து விமான நிலையங்களைச் சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரை கான்கிரீட்டால் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

நரி பிடிபட்டது

சூரத்தில் எருமை மீது விமானம் மோதியதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, “ஒடுபாதை அருகே நரிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் நரிகளைப் பிடிப்பதற்காக ஓடுபாதை அருகே 8 கூண்டுகள் வைத்தனர். அதில் ஓடுபாதை அருகே சுற்றித் திரிந்த ஒரு நரி கூண்டுக்குள் சிக்கியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x