

காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அளித்துள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொள்வது அவசியம் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “முஷாரப் இந்தியாவுக்கு நேர்மையான நோக்கங்களுடன் வந்தார். காஷ்மீர் பிரச்சினைக்கு அவரது 4 பரிந்துரைகள் அபாரமானது.
அது ஒரு அபாரமான ஆவணம், காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதனை அடிப்படையாகக் கொள்வது அவசியம். ஆனால் முஷாரப்பின் முயற்சிகளை இந்தியாவே தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் அல்ல என்பதைக் கூறுவதில் எனக்கு எந்த விதமான அசவுகரியமும் இல்லை.
அந்த ஆவணத்தின் ஒட்டுமொத்த அக்கறையும் காஷ்மீரின் இருதரப்பிலும் மதச்சார்பற்ற ஜனநாயகம் நிலவ வேண்டும் என்பதாகும். முஷாரப்பின் பரிந்துரைகள் அந்த அடிப்படையை நோக்கி மேற்கொள்ளப்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நான் நீண்ட காலம் பணியாற்றி வருகிறேன் என்பதை முஷாரப் நன்கு அறிவார். அவர் தனது பரிந்துரைகளை எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் என்னிடம் கொடுத்தார். காஷ்மீர் கமிட்டி சார்பாக நான் முஷாரப்பின் ஆவணத்தில் சில மாற்றங்களைச் செய்தேன் அதனை முஷாரப் ஏற்றுக் கொண்டார்.
அந்த பரிந்துரைகளின் பிரதான நோக்கம், இருதரப்பிலும் மதச்சார்பற்ற ஜனநாயகம் மலர்வதாகும்.
காஷ்மீர் கமிட்டி 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரிவினைவாதிகளுடன் உரையாடலைத் தொடங்க அந்தக் கமிட்டி உருவாக்கப்பட்டது. நான் பிரிவினைவாதிகளுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் 'பாகிஸ்தான் ஏஜெண்ட்கள்’ அல்ல. ஒரு சமயத்தில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தனர். ஆனால் அதில் பெரும்பான்மையோர் இந்தியாவுடன் இருக்கவே விரும்புகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ராணுவ வீரர்களால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அவர் கூறும்போது, “அவர்கள் தெரிந்தே இதைச் செய்திருந்தால் கடுமையாக தண்டனை அளிக்கப்படவேண்டும், அவர்களை தூக்கிலிட வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடததக் காரணமென்ன, எது அவர்களைத் துப்பாக்கியால் சுடத் தூண்டியது என்பதை தீவிரமாக, துல்லியமாக விசாரிக்க வேண்டும்” என்ற அவர், பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட பிறகு காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் அகற்றப்படவேண்டும் என்றும் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்களை முன்னிட்டு பிரிவினைவாதிகளுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டது பற்றி ராம் ஜெத்மலானி கூறுகையில், “நான் அவர்களிடம் (பிரிவினைவாதிகளிடம்) கூறினேன், அவர்கள் நடவடிக்கைகள் தடுக்கப்படுவதற்கான தெளிவான சாட்சியங்களுடன் வாருங்கள், நான் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறேன் என்று.” இவ்வாறு கூறினார் ராம் ஜெத்மலானி.