

அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவர், 2 குழந்தைகளோடு மீண்டும் எப்போது இணைவேன் என்று இந்திய துணைத் தூதர் தேவயானி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி விசா மோசடி, பணிப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டு ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் விடுவிக்கப் பட்டார்.
தூதர் என்றும் பாராமல் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது உள்ளிட்ட அமெரிக்காவின் ஆணவப் போக்கான நடவடிக்கைகள் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து தேவயானிக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்வகையில் அவரை ஐ.நா. தூதரக ஆலோசகராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்த அமெரிக்கா, நாட்டைவிட்டு வெளியேறுமாறு தேவயானியைக் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் டெல்லி திரும்பினார்.
மீண்டும் அவர் அமெரிக்கா திரும்பினால் கைது செய்யப் படுவார் என்று அந்த நாட்டு வெளி யுறவுத் துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் கணவர், குழந்தைகள்
தேவயானியின் கணவர் ஆகாஷ் சிங் ரத்தோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இத் தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போது தேவயானி மட்டுமே இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அவரது 2 குழந்தைகளும் தந்தையுடன் உள்ளனர். இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு தேவயானி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது கணவர், குழந்தைகளை விட்டுப் பிரிந்து நான் தனிமரமாக தவிக்கிறேன். அவர்களோடு மீண்டும் இணைவேனா என்பது சந்தேகமாக உள்ளது. தாங்க முடியாத மன வேதனையில் தவிக்கிறேன்.
தினமும் இரவில் குழந்தை களோடு மணிக்கணக்கில் பேசுகிறேன். என்னுடைய 4 வயது குழந்தை, அம்மா நீ எப்போது வருவாய் என்று கேட்கிறாள். அந்தக் கேள்வி எனது மனதை சுக்குநூறாக உடைக்கிறது. என்னால் அழ மட்டுமே முடியும். அவளுக்கு பதில் அளிக்க முடியாது.
ஒருவேளை எனது குழந்தைகள் அமெரிக்காவிலேயே தொடர்ந்து படிக்க விரும்பினால் அவர்களை எப்போது பார்ப்பேன், நான் நிரந்தரமாக தனிமரமாகி விடுவே னோ என்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கின்றன.
நான் நேர்மையானவள். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லை, நான் நிரபராதி என்பதை நிரூபிப் பேன். ஆனால் அதற்கு எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை எனது குடும்பத்தோடு நான் இணைய முடியாது என்று கண்ணீர்மல்க கூறினார்.
நல்ல தோழியை இழந்துவிட்டீர்கள்…
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லி திரும்பியபோது அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தேவயானியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய தேவயானி, நீங்கள் (அமெரிக்கா) ஒரு நல்ல தோழியை இழந்து விட்டீர்கள், அதற்குப் பதிலாக ஒரு பணிப்பெண்ணையும் அவரது குடிகார கணவனையும் பெற்றுள் ளீர்கள். அவர்கள் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள். நான் எனது குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளி யேறுகிறேன் என்று கூறியுள்ளார்.