பிரதமரை பாஜக அவமதிக்கவில்லை: ராஜ்நாத் விளக்கம்

பிரதமரை பாஜக அவமதிக்கவில்லை: ராஜ்நாத் விளக்கம்
Updated on
1 min read

பாஜக எந்த விதத்திலும் பிரதமரை அவமரியாதை செய்யவில்லை என்று கூறிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், “சோனியா காந்தி உண்மையிலேயே வருத்தப்படுவதாக இருந்தால், காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை விலகக் சொல்லவேண்டும்” என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது “பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக கேலி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, பிரதமருக்கு பின் காங்கிரஸ் கட்சி முழுவதும் ஆதரவாக நிற்கிறது. இந்த செய்தியை படித்தபோது வியப்பு மேலிட்டது. பிரதமரை கேலி செய்தது பாஜக அல்ல. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்திதான். மனம் புண்படும்படி பேசிவிட்டு இப்போது அவரை சமாதானம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ். இது தேவை தானா?

பாஜக எந்த விதத்திலும் பிரதமரை அவமரியாதை செய்யவில்லை. உண்மையில் பிரதமர் மீது சோனியாவுக்கு மரியாதை இருந்தால், கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி ராகுலை கேட்டுக் கொள்ளவேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவசரச் சட்டம் பற்றி கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே மன்னிப்பு கேட்க வேண்டும்.

வெளிநாட்டு்க்கு பிரதமர் சென்றிருக்கும்போது அவரை தனிப்பட்ட கட்சியின் பிரதமராக பார்க்க முடியாது. தேசத்தின் பிரதிநிதியாகவே அவரைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் இருக்கும்போது அவரது நம்பக்கத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் அவசரச் சட்டம் பற்றி கருத்து தெரிவித்தது, எந்த நோக்கத்துக்காக பிரதமர் வெளிநாடு சென்றாரோ அந்த நோக்கமே தோற்று விட்டதாகத்தான் அர்த்தம்.

குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி பதவி பறிப்புக்கு உள்ளாவதிலிருந்து காப்பாற்ற வகை செய்து கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தரவேண்டாம் என எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் எனபதே குடியரசுத் தலைவருக்கு எங்களின் பணிவான வேண்டுகோள்” என்றார் ராஜ்நாத் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in