

பிரதமர் பதவிக்கான லட்சியம் இல்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
உ.பி. தலைநகர் லக்னோவில் நேற்று செய்தி சேனல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் கூறியதாவது:
உ.பி.யில் ஆற்றிவரும் பணியிலேயே நான் மனநிறைவு பெறுகிறேன். நாட்டின் பிரதமர் ஆகும் லட்சியம் இல்லை. டெல்லியை விட்டு விலகி இருப்பவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி வெறும். 403 உறுப்பினர் களை கொண்ட பேரவையில் நாங்கள் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம். எனது அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்த மக்களில் 50 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் 300 இடங்களை பெறுவோம்.
எனது தந்தை முலாயம் சிங் யாதவுடன் எனக்கு சுமூக உறவு உள்ளது. தந்தை மகன் என்ற உறவை ஒருபோதும் மாற்ற முடியாது. சமாஜ்வாதி கட்சிக்கு தீங்கிழைக்க விரும்புவோரிடம் இருந்து நாங்கள் விலகியிருப்பது அவசியமாகிறது. இது கலகம் அல்ல. முலாயம்தான் எங்கள் அனைவருக்கும் தலைவர். சமாஜ்வாதி கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு தற்போது அடுத்த தலைமுறையிடம் வந்துள்ளது.
எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். இனி இந்த இயக் கத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எங்கள் தலைமுறையை சேர்ந்ததாகும். காங்கிரஸ் கட்சியு டனான நட்புறவு நீடிக்கும். உ.பி.யில் தனித்துப் போட்டியிட நான் விரும்பினாலும், தற்போதுள்ள சூழலால் கூட்டணி முடிவுக்கு தள்ளப்பட்டேன். இவ்வாறு அகிலேஷ் கூறினார்.