Last Updated : 18 Jun, 2017 10:59 AM

 

Published : 18 Jun 2017 10:59 AM
Last Updated : 18 Jun 2017 10:59 AM

காஷ்மீரில் 6 போலீஸார் சுட்டுக்கொலை: தீவிரவாதிகளின் செயல் கோழைத்தனமானது - பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம்

காஷ்மீரில் 6 போலீஸாரைக் கொடூரமாகக் கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி களின் செயல் கோழைத்தனமானது என, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் எனுமிடத்தில் நேற்று முன்தினம் போலீஸார் மீது அங்கு பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களது முகங்களைக் கொடூர மாகச் சிதைத்த தீவிரவாதிகள், போலீஸாரின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.

புல்வாமா பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பெரோஸ் அகமது தர் தலைமையில் 6 போலீஸார் வழக்கமான ரோந்துப் பணிக்காகச் சென்றபோது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.

அருண் ஜேட்லி

இதற்கு மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். அதில், ‘அச்சாபால் பகுதியில் தீவிரவாதிகளால் 6 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் கோழைத்தனமானது. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை வணங்குகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளின் உடல்கள் மீட்பு

இதற்கிடையே, அர்வானி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது நடந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் உள்ளூர் தலைவரான ஜூனைத் மட்டூ என்கிற ஜனா (24), அதுல் முஸ்தாக் மிர் என்கிற நானா (18) மற்றும் நிஷார் அகமது வானி (20) ஆகியோர் நேற்றுமுன்தினம் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்கள். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவே 6 போலீஸாரைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக ராணுவ தரப்பில் நம்பப்படுகிறது.

குல்காம் மாவட்டம் குத்வானி கிராமத்தைச் சேர்ந்த ஜூனைத் மட்டூ கடந்த 2015-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் தெற்கு காஷ்மீரின் தீவிரவாத இயக்க கமாண்டரானார். அனந்த்நாக் பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 போலீஸாரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்குப் பிறகு லஷ்கர் இ தொய்பாவில் முக்கியப் பொறுப்புக்கு அவர் வந்தது குறிப்பிடத்தக்கது.

வீரருக்கு அஞ்சலி

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் பக்தவார் சிங், காஷ்மீர் மாநிலம் நவ்சீரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x