Published : 07 Nov 2014 03:54 PM
Last Updated : 07 Nov 2014 03:54 PM

துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் பலி: தவறுக்கு பொறுப்பேற்றது ராணுவம்

காஷ்மீரில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்கு ராணுவம் முழு பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டி னென்ட் ஜெனரல் ஹூடா ஸ்ரீநகரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வெள்ளை நிற காரில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பட்கம் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதை தாண்டி சென்ற கார் மீது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 இளைஞர்கள் உயிரிழந்து விட்டனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. நடந்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம், அதற்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாதபடி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ராணுவத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

இன்னும் 10 நாட்களுக்குள் விசாரணை நிறைவுபெறும். அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்த இளைஞர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ராணு வத்தின் சார்பில் உயர் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x