

ஹரியாணா சாமியார் ராம்பாலுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணையை போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கினர்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தால் சாமியார் ராம்பாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அவரிடமான விசாரணை அம்மாநில போலீஸார் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கினர். இந்த விசாரணை 5 நாட்களுக்கு நடக்க உள்ளது.
ஹிஸார் ஆசிரமத்தில் நடந்த கலவரத்தில் 6 பேர் பலியானது மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தொடர்பாக சாமியார் ராம்பால் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 38 பேர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பாலின் ஆசிரமத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் பிடிவாரன்ட் பிறப்பித்தும் ராம்பால் ஆஜராகாததால் அதிருப்தி அடைந்த பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம், திங்கள்கிழமை மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பித்தது. வெள்ளிக்கிழமைக்கும் ராம்பாலை ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ராம்பாலை கைது செய்வதற்காக அவரது ஆசிரமத்தின் முன்பு கடந்த 10-ஆம் தேதி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது ராம்பாலின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். அதற்கு பதிலடியாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி தடியடிநடத்தினர். இதில் போலீஸார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் ஆசிரமம் அமைந்திருக்கும் ஹிஸார் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த விவகாரத்தால் ராம்பாலை கைது செய்வது ஹரியாணா மாநில காவல்த்துறைக்கு பெரும் சவாலாக அமைந்தது.