

அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் (47) நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அவரது ஆதரவாளர்கள் முதல்வர் பெமா காண்டுவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் துணை முதல்வருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கும் தீ வைத்தனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த கலிக்கோ புல், கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்து, முதல்வர் நபம் துகியின் ஆட்சியைக் கலைத்தார். பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவுடன் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அருணாச் சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கலிக்கோ புல்லுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கலிக்கோ புல் தனது முதல்வர் பதவியை ஜூலை 13-ம் தேதி ராஜினாமா செய்தார். எனினும் இடாநகரில் உள்ள முதல்வர் இல்லத்தை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கு வசித்து வந்தார்.
இந்நிலையில் கலிக்கோ புல் நேற்று தனது படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
கலிக்கோ புல் உயிரிழந்த செய்தி அறிந்து ஆவேசமடைந்த அவரது ஆதரவாளர்கள் உடனடியாக நித்தி பிஹார் பகுதியில் உள்ள முதல்வர் பெமா காண்டு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்த மர்ம மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். அத்துடன் துணை முதல்வருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கும், 2 பங்களாக் களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஒருவாரமாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கலிக்கோ புல், வெளிநபர்களை சந்திப்பதை அறவே தவிர்த்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த கலிக்கோவுக்கு மூன்று மனைவி களும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
ஆரம்பத்தில் தச்சு வேலை செய்து வந்த கலிக்கோ புல், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கெகாங் அபாங், முகுத் மித்தி, டோராஜி காண்டு உள்ளிட்ட பல்வேறு முதல்வர் களின் அமைச்சரவையில் நீண்டகாலமாக நிதியமைச்சராக பணியாற்றினார்.
கலிக்கோ புல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கலிக்கோ புல் மறைவை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நேற்று கூட்டப் பட்டது. அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக கலிக்கோ புல்லின் உடல் அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.