பிஹார் பிளஸ் 2 தேர்வு குளறுபடி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு நிதிஷ் உத்தரவு

பிஹார் பிளஸ் 2 தேர்வு குளறுபடி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு நிதிஷ் உத்தரவு
Updated on
1 min read

பிஹார் பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாத மாணவர்கள் முதலிடம் பிடித்தது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையை 10 நாட்களுக்குள் மாநில காவல்துறை தலைவர் பி.கே.தாக்கூரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பிஹார் மாநிலத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியரிடம் உள்ளூர் ‘செய்திச் சேனல்’கள் பேட்டிகண்டு ஒளிபரப்பின. ரூபி குமாரி என்ற மாணவி 12-ம் வகுப்பு கலை பாடப்பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

பேட்டியின் போது, அவரிடம் அரசியல் அறிவியல் பாடம் குறித்து கேட்கப்பட்டது. ‘அது, சமையல் கலை சம்பந்தப்பட்டது’ என மாணவி பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பதை, 'புரோடிக்கல் சயின்ஸ்' என உச்சரித்தார்.

இதனையடுத்து பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) ரத்து செய்தது.

இதற்கிடையில், "பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாத மாணவர்கள் முதலிடம் பிடிக்க யார் காரணம் என்பதை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரும் தப்ப முடியாது" என, மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர், பிஹார் பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாத மாணவர்கள் முதலிடம் பிடித்தது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக திங்கள்கிழமை பின்னிரவில் முதல்வர் நிதிஷ் குமார், மாநில கல்வி முதன்மை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே சிறப்பு விசாரணைக் குழு அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

பிஹாரில் கல்வி வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது தனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக நிதிஷ் குமார் வருந்தியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in