

காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், மனிதநேயம் அடிப்படையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்ன செய்ய விரும்பினாரோ அந்த கனவை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சட்டமன்ற தேர்தலையொட்டி, இம்மாநிலத்தின் கிஷ்த்வார் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சினைக்கு ஜனநாயகம், மனிதநேயம், மக்களின் சமூக, கலாச்சார பண்புகள் அடிப் படையில் தீர்வுகாண வாஜ்பாய் விரும்பினார். இந்த வார்த்தைகள் காஷ்மீர் மக்களின் இதயங்களில் நிறைவை தந்தன. ஒவ்வொரு இளை ஞனிடத்திலும் சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கையை துளிர்க்கச் செய்தன.
ஜம்மு காஷ்மீரில் பாஜகவை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்திடுங்கள். இங்குள்ள மக்களுக் காக வாஜ்பாய் கண்ட கனவை எனது அனைத்து வலிமையையும் பயன்படுத்தி நிறைவேற்றுவேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வளர்ச்சி பெறுவதில் மத்திய அரசு முழு அக்கறை கொண்டுள்ளது. வளர்ச்சியே எங்களின் தாரக மந்திரம். என் மீது நம்பிக்கை வைத்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் அதற்கு வட்டியும் அசலுமாக சேர்த்து மாநிலம் முழு வளர்ச்சி பெற பாடுபடுவேன்.
வாஜ்பாய் தொடங்கிய பணிகளை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள். காஷ்மீர் மக்கள் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவன் நான். பதவியேற்றதில் இருந்து நான் ஒவ்வொரு மாதமும் காஷ்மீர் வருவதை பிற கட்சிகள் வியப்புடன் பார்க்கின்றன. ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் வந்த நான் தற்போது நவம்பரில் வந்திருக்கிறேன். மாநிலம் துரித வளர்ச்சி பெற வேண்டும் என் பதே எனது தலையாய விருப்பம். கடந்த 50 ஆண்டுகளாக மாநிலம் வளர்ச்சி காணாமல் இருக்கிறது.
இரு குடும்பத்தினர் தான் (அப்துல்லா, முப்தி) இந்த மாநிலத்தை ஆளவேண்டுமா? மற்ற குடும்பங்களில் இருந்து தலைவர்கள் உருவாகக் கூடாதா? இந்த 2 குடும்பங்களை நீங்கள் தண்டிக்காவிட்டால், அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுவிடுவார்கள்.
அவர்களிடையே புரிந்துணர்வு உள்ளது. மாநிலத்தை ஒருவர் 5 ஆண்டுகளுக்கு சூறையாடினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மற்றொருவர் சூறையாடுகிறார்” என்றார் மோடி.
பிரதமர் பயணத்தையொட்டி மாநிலத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
முலாயமுக்கு மோடி வாழ்த்து
மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில், முலாயம் சிங் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியதுடன் அவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ கடவுளை வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
முலாயம் சிங் பிறந்த நாள் விழா, சமாஜ்வாதி கட்சி சார்பில் உ.பி.யின் ராம்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மிகவும் ஆடம்பரமாக 2 நாள் கொண்டாடப்பட்ட இந்த விழா மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.