

அஞ்சு ஜார்ஜ் கேரளாவின் கவுரவம், அவரை கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மாநில மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கேரள விளையாட்டு கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு பதவியேற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனை மாநில விளையாட்டு கவுன்சில் தலைவர் அஞ்சு ஜார்ஜ் அண்மையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அஞ்சு, அமைச்சர் ஜெயராஜன் தன்னை அவமதித்து மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து கேரள மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இன்று கூறியதாவது:
''அஞ்சு ஜார்ஜ் கேரளாவுக்கு பல்வேறு பெருமைகளை பெற்றுத் தந்துள்ளார். அவரை மாநிலத்தின் கவுரமாகக் கருதுகிறோம். அவர் உட்பட விளையாட்டு துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள யாரையும் நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை'' என்றார்.